இருப்பின் இன்மை


உனக்கெனைத் தெரிய
வாய்ப்பில்லை!

உலகத்தின் தென் முனையில்
மண் புதைந்த விதை நான்!
உயிர் ஏற்றும் மழைக்கு
வட மேகம் விழைகிறேன்!
நீ கிழக்கிலோ, மேற்கிலோ
இருப்பது தெரியாமல்!

உன் நாடக விளையாட்டில்
என் வாசம் கூட
எட்டிப் பார்ப்பதரிது,
பிறகெப்படி வாழ்க்கை?

என்னை உயர்த்திட வரும்
அடியுரம் நீ என்று
புதையுண்ட மண்ணின்
எதிர்த்திசையில்
காத்திருக்கும் வேர் நான்!

எங்கோ ஒரு காட்டில்
உன் நினைவால் மெய்மறந்து
அதனாலேயே வெட்டுண்டு
காய்ந்து கிடக்குமோர்
மூங்கில் நான்!
விழைவது என்னவோ
உன் காற்றை!

ஆக,
உனக்கெனைத் தெரிய
வாய்ப்பில்லைதான்!

எனில்,
சூரியன் அறிமுகம் வேண்டி
சூரியகாந்தி திரும்புவதில்லை!
காகிதங்களைக் காதலித்தெல்லாம்
பேனா அதனைப் புணர்வதில்லை!
கேட்கும் காதிருக்கும் என்று
யூகித்தெல்லாம் கடல்
அலைப்பாடலை அவிழ்ப்பதில்லை!

நீ இருக்கிறாய்
அதே நினைப்பில் நானும்!
நிலம் இருக்கிறது,
அதே நினைப்பில் வானும்!!

-விவேக்பாரதி
12.04.2023
மதியம் 1.33

Comments

Popular Posts