விண்மீன்கள் பார்க்கிறேன்


மிகவும் பிடித்தபொருள் அருகில் கிடைத்துவிட
மின்னலாய்த் தோன்றும் நகையில்
மீறிய வலிநீங்கி ஆறுதல் வரும்போது
மிஞ்சிடும் அமைதி நிலையில்
அகவல் மகிழ்ச்சியுடன் மழையின் மணம்நுகர்ந்து
ஆடிடும் மயிலின் ஒயியில்
அம்மா எனமுதலில் அழைக்கும் குழவியிதழ்
அரும்பும் இதழின் துளியில்
புகழும் பணமுடியும் அறத்தால் குவிந்துவரப்
பூத்திடும் விழியின் விரிவில்
புல்லின் நுனியழகில் தூங்கும் துளியதனில்
பூமி தெரியும் நொடியில்
நிகழும் மனதறையில் நினைவின் மணமெழுந்து
நிரப்பத் தோன்றும் உணர்வில்
நிறையும் விண்மீன்கள் பார்த்து வியக்கிறேன்
நிழல்நுனி பிடித்த நானே!

தன்னை மறந்துடலம் தரையில் ஆடும்கணம்
தனலாகும் வேர்வை மழையில்
தாராளக் கைவந்து பாராளக் கொடைதந்து
தயவில் இளகும் கொடையில்
முன்னம் நிகழ்ந்தசெயல் போலே நடப்பதனை
மூளை நினைக்கும் பொழுதில்
மூளும் தீச்சுடரின் மையம் இருக்குமிருள்
முனைப்பைக் கொடுக்கும் வினையில்
கன்னல் காற்றுபட இசையைப் பொழிந்தாலும்
கரிக்கட்டை ஆகும் இருளில்
காற்றின் கரங்களெனைக் காதல் புரிந்துதலை
காதெலாம் கோதும் பரிவில்
இன்னும் நொடிக்கொடி என்ன நடக்குமென
அறியாத வாழ்வின் புதிரில்
இரவின் விண்மீன்கள் பார்த்து வியக்கிறேன்
இரவாகி விரியும் நானே!!

-விவேக்பாரதி
14.04.2023
இரவு 01.10

Comments

Popular Posts