வாசம் சுகமா?


அறையில் நுழைந்த அடுத்தகணம்
ஆடி வந்தென் கழுத்திருக்கி
நிறைவாய்க் கட்டிப் பிடிக்கையிலே
நிரம்பும் வாசம் நம்ஏக்கம்!
குறையாக் காதல் ததும்புகையில்
கொடுத்து வாங்கும் முத்தங்களில்
தெறிக்கும் இதழின் துளிவழியே
செழிக்கும் வாசம் நம்காதல்!

உன்னை இறுக்க நான்ஏந்தி
உலகம் சுற்றும் அழகைப்போல்
முன்னும் பின்னும் சுற்றுகையில்
முருகும் வாசம் நம்சேட்டை!
கன்னம் பிடித்து மறுபடியும்
களைத்துக் களைத்து இளைத்தபடி
சின்ன தாகத் தொடும்முத்தம்
சிந்தும் வாசம் ஆசுவாசம்!

கட்டில் சேர்ந்து நாம்அமர்ந்தும்
கதைகள் பலவும் பேசுகையில்
ஒட்டும் கண்கள் சந்திப்பில்
உதிரும் வாசம் எதிர்பார்ப்பு!
கட்டிப் பிடித்து பின்னகன்று
கன்னம் கன்னம் உரசுகையில்
கொட்டும் வியர்வை மழையினிலே
குவியும் வாசம் படபடப்பு!

நம்மை நாமே அறியாமல்
நாணம், ஆடை, விட்டொதுங்கப்
பொம்மை ஆகிப் போகையிலே
பொலியும் வாசம் நம்காமம்!
தம்மைத் தாமே தரநினைக்கும்
தாராளத்தின் சன்னிதியில்
நிம்மதிக்கும் துயருக்கும்
நடுவின் வாசம் நம்கூடல்!

அந்தரங்கம் நிறைவடைந்து
அழகின் அங்கம் அணைத்தபடி
சொந்தம் கொள்ளும் தருணத்தில்
தோன்றும் வாசம் நம்உரிமை!
அந்தம் ஆதி அறியாத
ஆழ மௌனக் கடல்நனைந்து
சிந்தை நிறையும் பொழுதினிலே
சிலிர்க்கும் வாசம் உள்அமைதி!

வாசங்கள்தான் நினைவலைகள்
வாசங்கள்தான் நிஜநிலைகள்
வாசங்கள்தான் சுவடுகளாம்
வாசங்கள்தான் வாழ்விலக்கு
வாசம் வழியே வாழ்கின்றோம்
வாசம் தான்நாம்! சரிசரி,உன்
வாசம் இங்கே மிகச்சுகம்!என்
வாசம் அங்கே சுகம்தானா??

-விவேக்பாரதி
14.04.2023
மாலை 03.15

Comments

Popular Posts