எங்கிருக்கிறாய் என்னிறைவா?


கண்கள் முடிநான் தேடிப் பார்க்கிறேன்
காற்றில் கைகளை வீசிப் பார்க்கிறேன்
உண்மை எப்புறம் ஊன்றிக் கேட்கிறேன்
உள்ள ஓசைகள் ஒடுக்கி வைக்கிறேன்

எங்கிருக்கிறாய் என்னிறைவா - நான்
ஏங்கி நிற்பதே உன்நிறைவா?

ஊர் எனைத்தினம் உரசும் வேளையும்
உள்ளம் என்னையே ஆட்டும் போதிலும்
போர் எனக்குள்ளே மூளும் போதிலும்
புலன்கள் போட்டிகள் செய்யும் போதிலும்
நேர் நிறுத்தியுன் சிந்தை ஒன்றையே
நேரம் யாவிலும் துணைக்கழைக்கிறேன்
யார் விடுத்ததோ ஆசை அம்புகள்
யாழ் தொடுத்தெனக் குள்ளில் பாயுதே

எங்கிருக்கிறாய் என்னிறைவா - நான்
ஏங்கி நிற்பதே உன்நிறைவா?

பாடிப் பாடிநான் பரவ சிக்கிறேன்
பார்த்துப் பார்த்துநான் புன்ன கைக்கிறேன்
ஓடி ஓடிநான் மிக உழைக்கிறேன்
ஓயும் நேரமும் உனை நினைக்கிறேன்
தேடித் தேடிநான் எனை வளர்க்கிறேன்
செதுக்கும் போதிலும் உனைத் துதிக்கிறேன்
ஆடி ஆடிநீ காட்டும் லீலைகள்
யாவும் என்மனம் மிக ரசிக்குதே!

எங்கிருக்கிறாய் என்னிறைவா - நான்
ஏங்கி நிற்பதே உன்நிறைவா?

உள்ளி ருப்பதாய் ஒன்று சொல்கிறார்
உற்ற கோயிலை நாடு கென்கிறார்
தெள்ளு மறைகளை ஓதுகென்கிறார்
தெய்வம் வேண்டுதல் சேர்க்கும் என்கிறார்
அள்ளி உன்னைநான் அணைத்துக் கொள்கிறேன்
அன்பு காதல்கள் யாவும் சேர்க்கிறேன்
வெள்ளம் போலநீ வந்து சேர்க!என்
வேதனைகளை கொண்டு போகவே!!

எங்கிருக்கிறாய் என்னிறைவா - நான்
ஏங்கி நிற்பதே உன்நிறைவா?

-விவேக்பாரதி
15.04.2023
இரவு 11.55

Comments

  1. மனம் ஒரு கோயில், சிந்தனைகளே தெய்வவழிகள், உணர்வோர்க்கு உண்டு ஆண்டவன் வரிவடிவில்

    ReplyDelete

Post a Comment

Popular Posts