தூக்கத்தவம்


தூக்கத்தைப் போலவொரு தூயதவம் இங்குண்டோ?
தேக்கத்தில் ஓட்டத்தில் தேயும் உடல்,உயிர்கள்
நிச்சலனம் கொள்ளும் நிறைவுப் பெருவாயில்
அச்சங்கள் இல்லா அமைதித் திருக்கோயில்
கண்மூடி மண்ணில் கலையாமல் நாமிருக்க
விண்மூடப் பாயும் விசித்திரக் கற்பனைகள்
நற்கனவாய்த் துர்கனவாய் நாலு பெயர்பெறினும்
பொற்கணமாய் மின்னும் பொலிவுத் திருத்தூக்கம்!
ராத்தூக்கம் சொர்க்கம் இரவெல்லாம் கண்விழித்து
சேர்த்துப் பகற்பொழுதில் சாய்தல் பெருஞ்சொர்க்கம்
மத்தியான வேளை மயக்கும் வெயில்நடுவே
அத்துவானக் காடாய் அமைந்த நிழலடைய
லேசான காற்று தொடும்பொதே கண்ணுக்குள்
பேசாது சேரும் பெருந்தூக்கம் ஆனந்தம்!
நின்றபடி தூங்குவது நீட்டி உறங்குவது
சென்றபடி தூங்குவது செத்தபடி தூங்குவது
பேரிரைச்சல் சூழுலகில் பென்னம் பெருங்குறட்டைப்
போரிசையில் தூங்குவது போர்வைக்குள் தூங்குவது
கால்போட்டுத் தூங்குவது கைசூப்பித் தூங்குவது
மேல்பொட்டும் ஆடையற்ற மேன்மையிலே தூங்குவது
வேலையிலே தூங்குவது வெற்றெனவே தூங்குவது
சாலையிலே தூங்குவது சன்னிதியில் தூங்குவது
பள்ளி வகுப்பறையில் பாடத்தின் மத்தியிலே
அள்ளும் அசதிக்குள் அப்படியே தூங்குவது
குப்புறக்க தூங்குவது கூட்டத்தில் தூங்குவது
எப்போதும் ஏதோ உளறியே தூங்குவது
திண்ணையிலே தூங்குவது சேர்மெத்தை ஆசனத்தில்
வண்ணமுடன் தூங்குவது வாஞ்சையுடன் தூங்குவது
அப்பப்பா சொல்லில் அடுக்கி முடிந்திடுமா?
எப்படியி ருந்தாலும் ஏகாந்தம் இத்தூக்கம்
துக்கம் மனத்தை துரத்தி அழுத்துகையில்
விக்கும் உடலில் விழைவது தூக்கமன்றோ
சோகம் அழுத்திச் சொருகும் பொழுதெல்லாம்
தேக மருந்தாய்த் சிரித்தல் துயிலன்றோ!
கொட்டாவி வந்து குறிப்பாய் அறிவிக்க
நட்டவிரு கண்கள் நயந்தபடி உட்குழைய
நீரரும்பித் தோன்றும் நிறைவான தூக்கத்தைப்
பேரிறைவன் என்றே பெரிதாக வாழ்த்துகிறேன்
தூக்கத் தொடர்பைத் தொடர்பவரை வாழ்த்துகிறேன்
தூக்கத்தை நீங்கித் தொலைபவரை வாழ்த்துகிறேன்
தூக்கமெனும் போதையிலே தோன்றும் தனியுலகில்
ஏக்கமொன்றும் இல்லை! எனவேதான் தூங்குகிறேன்!
வாய்பிளந்த கொட்டாவி வார்த்தை மொழிவதில்லை
தாய்மடி வேண்டா தலையணை தான்வேண்டா
பார்த்து நகருங்கள் போதும்! உதவியெனின்
போர்த்தாமல் தூங்குகிறேன் பொய்யாய் எழுப்பாதீர்!!

-விவேக்பாரதி
26.04.2023
மாலை 4.37 

Comments

Popular Posts