இமைகளுக்கு நன்றி


எரிமலை மூடுதற்கு 
   இலங்குமோர் மூடி உண்டா 
திரைகடல் மூடுதற்குச் 
   சிறந்ததோர் பாய்தான் உண்டா
அருவியை மூடுதற்கும் 
   அணிமிகும் கலந்தான் உண்டோ 
இருவிழி மூட மட்டும் 
   இமைகளே வந்தீர் நன்றி 

அழுகையைத் தேக்குதற்கும் 
   ஆத்திரம் கொதிக்கும் நேரம் 
மழையுடன் தணிப்பதற்கும் 
   மனதினில் உணர்ச்சி பொங்கி 
வழிகிற நேரம் என்றன் 
   மனநிலை சமனில் வைக்க 

அழிவிலாத் திரையாய் வந்தீர் 
   இமைகளே உமக்கு நன்றி! 
பார்த்தவை கண்களுக்குள் 
   பச்செனப் பதியம் போடச் 
சேர்த்ததை மீண்டும் எண்ணி 
   செப்பிட, உடலுக் கொவ்வாச் 
சீர்த்தைகள் சூழும் போது 
   செயல்பட்டு விழியைக் காக்க 
ஈர்த்துநீர் மூடிக் கொள்வீர் 
   இமைகளே உமக்கு நன்றி!

உங்களால் கண்ணைக் காத்தேன் 
   உங்களால் கண்ணீர் காத்தேன்
உங்களால் உணர்வைக் காத்தேன் 
   உங்களால் உடலம் காத்தேன் 
உங்களால் மனம் பொங்காமல் 
   உறுதியில் இருக்கக் கற்றேன்
எங்களின் சமனைக் காக்கும் 
   இமைகளே உமக்கு நன்றி!!

-விவேக்பாரதி
04.04.2023 | இரவு 12.30 

Comments

Popular Posts