ஆன்மா தொடும் அணைப்பு


ஆன்மாவை எவரேனும்
இறுக்கி அணைக்கும் நாளுக்காக
ஒவ்வொரு அணைப்பையும்
உரிமையுடன் ஏற்கிறேன்!

வெறும் தோல்,
தோளோடு தோள்
தோழமை கலந்தது
வியாபாரம் நிறைந்தது,
பாசப் பரிவு
சோகமாற்றும் நம்பிக்கை
காமத்தின் கசடு
காதலின் விளிம்புத்தன்மை
இப்படி பலவற்றை
ஒவ்வொருவரின் அணைப்பு
வழங்கும்போதும்
ஆன்மா தொடும் அணைப்புக்கு
ஏங்கியே கிடக்கிறது மார்பு!

ஒரு டெடி பியரைக் கட்டிக்கொண்டு
தூங்கப் பார்த்தேன்
அதன் மிருது
மனிதர்களிடம் இல்லை!
மனிதர்களின் உஷ்ணம்
அதனில் இல்லை!

தலையணையைக்
கட்டிப் பிடித்துப் படுத்தேன்
கண்ணீர் உறிஞ்சியதே அன்றி
கவலை உறிஞ்சவில்லை!

காற்றை அணைக்கலாம் என்றாலோ
நில்லாதோடுகிறது
நன்னாட்களைப் போல...

நினைவுகளைக் கட்டிப்பிடித்தேன்
அதன் கனத்தில்
என் கட்டில் கால்களும்
என் கைகளும்
சேர்ந்தே கடகடக்கின்றன!

ஆன்மா தொடும்
ஒரு அணைப்புதான்
வாழ்வில் எத்தனை தேவையாய்
இருக்கிறது
கடைசியாக நினைவிருப்பது
அம்மா அணைத்தது
அப்போது நான் அவளின்
மார்புறிஞ்சிக் கொண்டிருந்தேன்

என் இதழோரம் வழிந்தது
பிரபஞ்சம் உருவான
உயிர்த்திரவம்!!

-விவேக்பாரதி
14.04.2023
இரவு 01.32 

Comments

Popular Posts