பிரளயத் தும்மல்


எதிர்க் கட்டடச் சாளரக் கம்பியைப் 
பள்ளமே செய்துவிடுமோ என 
ஐயுறும் படிக்குப் பிடித்து
இறுக்கத்தில் நிற்பினும் 
இறகில் காற்றைக் கொடுத்து 
வாங்கி
லாவகம் செய்கிறதோர் 
புறா! 

அதனருகே நெருங்கும் புறா ஒன்று 
கூரலகால் மெல்லக் குத்தி
வேரகலாக் காதலின் 
விளிம்பு மலரை மெதுவாய்ப் 
பறவையின் காதிடுக்கில் 
சூட்டிச் சிலிர்க்கிறது! 

அந்தக் காதல் படிமத்தின் 
ஓவியத்தை 
வரைந்து முடிக்குமுன் 
எங்கிருந்தோ
வந்தமர்கிறது இன்னோர் புறா 
அலகில் புழு, 
மலர் கொடுத்தது இப்போது 
ஒதுங்கி நிற்க,
புழு கொணர்ந்தது வாயூட்டி
புதுச்சிறகால் உடல் நீவி
நெஞ்சு புடைக்கிறது!

பாதி தின்ற புழுவைத் துப்பி 
மறைந்து நிற்கும் புறாவுக்கு 
பங்கிடுகிறது மலர்தரித்த புறா!
ஓரக்கண்ணால் இதை நோக்கி 
மூக்கின் மீது உலகம் 
தனலுறக் கோபித்து
அப்புறம் திரும்புகிறது புழு கொணர்ந்த
பொறுப்புப் புறா! 

பாதி புழுவைத் தின்று
மீதியை இரண்டும் 
வாயுடன் வாய்சுவைக்கும் 
காட்சியில் தெறித்து விழுந்த
காதல் துண்டு ஒன்று 
என் கண்ணில் பட்டுப் படர்ந்து 
புழு நெளியும் மலர்க்காடு செய்கிறது! 

அதன் இலை நிழலில் 
என் இதயத்தை இளைப்பாற 
அமர வைத்து, 
கனிக்கடியில் ரசனையை 
குத்தி நிறுத்திக் 
கூடாரம் அமைத்து வாழக் 
கூரைவேயும் நேரத்தில், 
எங்கிருந்தோ முக்குரசி 
ஏகிவிட்ட கருந்தூசால் வந்த 
பிரளயத் தும்மல் 
ஹச்ச்ச்ச்ச்

பறவையும் காணோம் 
வானமும் காணோம் 
பாதியாய்க் கிழிந்து 
தொங்கிக் கொண்டிருக்கிறேன் 
நான்!! 

-விவேக்பாரதி
05.04.2023 | இரவு 09.40

Comments

Popular Posts