இரண்டுளத் தட்டு


(மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டில் வரும் “ஒட்டும் இரண்டுளத்தின் தட்டு” என்ற வைர வரியைத் தலைப்பாகக் கொண்டு சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் நடந்த கவியரங்கிற்கு தலைமை தாங்கினேன். கவியரங்கத்தில் நான் படைத்த நிறைவுக் கவிதை)

நிலவொளி ஒழுகும் இரவினிலே
நீயும் நானும் அருகருகே
அலையொடு கரைதான் புணருகையில்
அமர்ந்தோம் ரசித்தோம் விழிவழியே!

மணலுடன் சுவடு பதிந்ததுபோல்
மனமும் மனமும் பதிந்ததுகாண்
தணலுடன் புனல்நம் கைவழியே
சேர்ந்ததென்ன மாயமதோ?

இசைபடித்தேன் என் இதழ்ரசித்தாய்
இமையில் இதயத் துடிப்பமைத்தாய்
நிசப்தமுடன் நாம் அலைரசித்தோம்
நீண்ட மூச்சில் வலிமறந்தோம்!

இருவருக்கும் இடைவெளி இருக்க
இதயம் இரண்டும் அணைத்திருக்க
இரண்டுளத்தில் எழும் தட்டொலியில்
இரவில் மீன்கள் புன்னகைக்க

நீயெனக்கார்? நான் உனக்குமெதோ?
நாடாப் பெயரில் கூடிநின்றோம்
தீயெழும்போது அடியிருளாய்
திறவாப் பக்கம் ரசித்திருந்தோம்

கடற்கரையோ மிகப் பழையதுதான்
காதல் பாடல் பழையதுதான்
உடலுரசல் அட பழையதுதான்
உயிரின் உரசல் புதியதன்றோ!

ஒட்டிய உள்ளத் தட்டினிலே
உலகத்தொலிகள் மறைந்ததன்றோ!!

-விவேக்பாரதி
16.03.2023
மாலை 6.30

வாய்ப்பளித்த குருநாதர் இலந்தை ராமசாமி அவர்களுக்கு நன்றி

படம் - என் பல கவிதைகளையும் தனித்த இரவுகளையும் பகிர்ந்துகொண்ட கொட்டிவாக்கம் கடற்கரை

Comments

Popular Posts