மௌன விதை


காத்திருக்கும் தாளுக்குக்
   கவிதை தருவாயா?
காது குளிரப் பாடுகிறேன்
   கேட்க வருவாயா?
பூத்திருக்கும் மலருக்குப்
   புன்னகை ஆவாயா?
புல்லாங்குழலாய் மாறுகிறேன்
   புகுந்து போவாயா?

உன்னை எண்ணிக் காத்திருந்தே
   உருகும் நிலவாவேன்
உயர்ந்து தாழ்ந்து விளையாடும்
   அலையாய் ஆவாயா?
இன்றை நேற்றை நாட்காட்டி
   இருப்பாய்க் காட்டுகிறேன்
இருக்கும் பருமன் கிழித்தழிக்க
   என்னைத் தொடுவாயா?

தொட்டுத் தொட்டுப் போகின்றேன்
   தொலைவில் அலையாக,
தொடர்ந்து கொண்டே இருக்கின்றேன்
   தொடுவான் நிழலாக,
விட்டு விட்டுப் பார்க்கின்றேன்
   மூச்சின் உறவைப்போல்,
மீண்டும் மீண்டும் ஒட்டுதடி
   மின்னல் உன்னெண்ணம்!

மரமாகும் விதை வேருக்கு
   மழைதான் பரிசாகும்
மழைக்கோ குளிர்ந்த காற்றுதரும்
   மரமே பரிசாகும்
சுரமாகும் என் கவிக்குநீ
   சொன்ன மௌனம் விதை
சொன்ன மௌனத்திற்கு என்னுள்
   தோன்றிய கவிதை மழை!!

-விவேக்பாரதி
09.04.2023
இரவு 1.45 

Comments

Popular Posts